Wednesday, January 3, 2007

முகம்-12

முகம்-11

முகம்-10

முகம்-9

முகம்-8

முகம்-7

முகம்-6

முகம்-5

முகம்-4

முகம்-3

முகம்-2

முகம்-1

சுயமரியாதையின் முகம்

அவசியமான காரியங்கள்

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத் துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும் பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப் படவேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.அவைகளில் முதலாவது எது வென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களி லும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அரு கதையற்றவர்கள் என்றும், ஆண் களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டிய தாகும்.ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும். இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட் பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக்கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தி யாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத்தவறான காரியமாகு மென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களாயிருக்கின்றோம்.தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத் தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப் படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்யவேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப் படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவது முண்டு.ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட் டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத் தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத் தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப்போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமான தென்றுதான் சொல்லவேண்டும்.எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்ற வர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சி வாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படு வதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.(‘பகுத்தறிவு’ - 1938)

நமது இயக்கமும் கம்யூனிசமும்

நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூ னிஸ்டுகளுக்கு எதிர்ப்பான இயக்கம் அல்ல; கம்யூனிஸ்டுகளின் மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமுமல்ல. கம்யூனிஸ்டுகள், ‘பொருளாதார சமத்துவம் ஒன்றினால் மட்டுமே நாட்டு நலம் வளர்ந்தோங்கிவிடும், மக்களிடையே உள்ள பேதாபேதம் ஒழிந்துவிடும்’ என்று கருதி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்கள் கடவுள், மத, மூடநம்பிக்கை களைப் பற்றிப் பேசாமலே இருந்து வருகிறார்கள்.பொருளாதார சமத்துவத்தால் சமுதாய பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்த மானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லாருமே ஒரே மதத்தை - அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல் லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்ப தோடு, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும்; தாழ்ந்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப் பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும்; இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுத்தறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதார பேதாபேதம் ஏற்பட்டு விடும். ஆகவே, முதலில் நம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்; அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் கம்யூனிசம் (பொருளாதார சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ - அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.பணக்கார முதலாளி ஒழிவதற்கு முன்னால், புரோகிதப் பார்ப்பன முதலாளிகளும், கல் முதலாளிகளும், மடமுதலாளிகளும் ஒழிய வேண்டும் என்பதை நம் கம்யூனிஸ்டுத் தோழர்கள் உணர்ந்து, முதலில் அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்? கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, - அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு குண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.(பம்பாயில், 12-2-1950-இல் சொற்பொழிவு, ‘விடுதலை’, 22-2-1950)கம்யூனி°ட் கொள்கைகளுக்கும், திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும் அதிகமான பேதம் கிடையாது. அதாவது, இன்றைய தினம் ஒரு தற்குறியை அழைத்து அவனிடம் கட்சிகளைப்பற்றிக் கேட்டால், அவன்,‘கம்யூனி°ட் கட்சி என்றால் பணக்காரர்களை ஒழிப்பது; நாட்டைத் தொழிலாளிகள் ஆதிக்கத்தில் ஆக்குவது’ என்றும்; ‘திராவிடர் கழகம் என்றால் பார்ப்பனீயத்தையும், பணக்காரனை - ஏழையை - பார்ப்பானை - பறையனை உண்டாக்கிய சாமியை யும் ஒழிப்பதும், கோவில்களிலே அடைபட்டுக் கிடக்கும் குழவிக் கற்களை உடைத்து எறிந்து அதன் சொத்துக்களைக் கல்விக்கும் தொழிலுக்கும் ஆ°பத்திரிக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் கூறுவது’ என்றுந்தான் கூறுவான். அப்படி யேதான் இன்றையதினம் பொதுமக்களும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே, கம்யூனி°ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதற்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கி றது. என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திரா விடர் கழகத்திற்குக் கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூடநம் பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகின்றது. பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீய மும், மேல்சாதி - கீழ்சாதித் தன்மையும், கடவுள் தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். சாக்கடையையும், கொசுக்களையும் ஒழித்தால்தான் அழுக்குத் தண்ணீரை யும் மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால்தான், திராவிடர் கழகம், ‘பணக்காரத் தன்மையை ஒழிக்க அ°திவார வேலை’ என்று கருதி, இதைச் செய்கின்றது.பணக்காரத் தன்மைக்கு எளிதில் எதிர்ப்புக் கிடைக்கும்; பார்ப்பனீயத் திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட் டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால், முதலில் சுலபமானதைச் செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச் செய்துகொள்ள லாம் என்று கருதுகிறார்கள்.ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம் அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் செய்து நிற்கும்.- (சொற்பொழிவு, ‘விடுதலை’, 4-10-1951)

முதல் பதிவு

தந்தை பெரியாரின் எழுத்துக்களை யுனிகோட் தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சி!