அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.
1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் ("ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் "உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.
அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.
நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் "குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.
(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)